பாட்டி சொன்ன கதை

old lady
எனது ஆச்சியிடம் கதை கேட்பதற்கு அந்தக்காலத்தில் எனக்கு அலாதி பிரியம்.

எந்த ஒருவிடயத்தை விளக்கவும் அவரிடம் எதாவது ஒரு கதை இருக்கும். சமைக்கும்போது வீட்டுவேலைகள் செய்யும்போது தோட்டவேலைகள் செய்யும்போது என எப்பொழுதும் யாரவது ஒருவருக்கு எதாவது ஒரு கதை சொல்லிக்கொண்டே இருப்பார்.

ஆச்சிக்கு எப்படி இவ்வளவு கதைகள் தெரியுமென சிறு வயதில் நானும், நண்பர்களும், சித்திபையனும், மச்சாளும் பலதடவைகள் வியந்திருப்போம். எப்போதும் ஆச்சி தானே நேரில் பார்த்ததுபோல சொல்லும் கதைகள் பெரும்பாலும் நம்பும்படியாக இருக்காது. ஆனாலும் நாங்களெல்லாம் ஆவென திறந்த வாய் மூடாமல் ஆச்சியை சுற்றி இருந்து ஒருவித பரபரப்புடனும் பயத்துடனும் அந்தக்கதைகளை மீண்டும் மீண்டும் கேட்போம். இவையெல்லாம் உண்மையான கதைகளா என்பது ஆச்சிக்கு மட்டும்தான் வெளிச்சம்.

அப்புவின் வீரத்தையும் சம்பாதிக்கும் திறனையும் சொல்லுவதில் அவருக்கு அலாதி பிரியம். உன்ரை அப்பாவெல்லாம் இப்ப என்னத்தைக் கஸ்ரப்டுகிறார் என்னத்தை உழைத்துக்கொட்டுகிறார். உன்ரை அப்பு அந்தக்காலத்திலை சீமைக்காரன் இருந்த காலத்திலை நாலு மலை, ஆறெல்லாம் கடந்து பத்துநாள் நடந்துபோய் எவ்வளவு சம்பாதித்திருப்பார். காட்டுப்பாதையிலை நடந்து போகும்போது எத்தனை தடவை கரடி நரியளோடையெல்லாம் சண்டிபோட்டுக் கலைத்திருப்பார். இப்ப உன்ரை அப்பன் என்னதை செய்யிறான். கோச்சியிலை ஏறி கொழும்புக்கு போய் கந்தோரிலை உக்கார்ந்திட்டு சம்பளத்தோட வாறான் உங்களுக்கெல்லாம் காசின்ரை அருமை எப்படி தெரியும் என்பாள்.

ஒருதடவை கரடி கலைத்துக்கொண்டுவர அப்பு வேட்டியை கழட்டி எறிஞ்சுபோட்டு கோவணத்தோடையே இரண்டுநாட்களாக நடந்து வீடு வந்தவர் என்பா. பலது இதுபோன்ற நம்பமுடியாத கதைகளாகவும் சிலது நம்பும்படியாகவும் இருக்கும்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை அடுத்துள்ள ஒரு அழகிய கிராமமான நிலாவெளியில்தான் ஆச்சியவை இருந்தவை. நிலாவெளியிலை அரைப்பங்கு நிலமும் அப்புவிற்குத்தான் சொந்தம்.

ஆச்சி இவ்வளவு சொல்லும் அப்புவின் எழிமைக்கு உதாரணமாக இன்னொருவரை கூறமுடியாது. அவரது இளமைக்காலத்திலை இந்தியாவிற்கு போய் காந்தியின்ரை கையாலை வாங்கிவந்த நூல் நூற்கும் ராட்டினம் எல்லாம் வீட்டிலை வைத்திருந்தவர். எந்தப்பெரிய விசேசத்திற்குக்கூட அவர் கதர் வேட்டி தவிர்த்து வேறு உடை அணிந்து நான் பார்த்ததில்லை.

எமது போராட்டம் ஆரம்பித்து ஆமிக்காரன் குண்டுபோடத்தொடங்கின காலத்திற்கு முதலே குண்டு போடுகிற கதையைக்கூட ஆச்சி சொல்லிக் கேட்டிருக்கிறன். இரண்டாம் உலக யுத்தகாலத்திலை யப்பான்காரன் திருகோணமலையிலை குண்டுபோட்டு தாக்கின கதையை, அவ பலதடவை சொல்லக்கேட்டு, பின்னொருகாலத்தில் நேரடியாக அந்த அனுபவத்தை காண்பேன் என்பதை அறியாது வியந்திருக்கிறேன்.

ஆச்சி திறமையான ஒரு திரைப்பட டைரக்டர்போல சம்பவங்களை நிஜமாக கண்முன் நடப்பதுபோல சொல்லுவா. எங்களை அந்தப்ப்பக்கம் இந்தப்பக்கம் அசையவிடாது கட்டிப் போடுM அளவு சுவாரசியமாக கதை சொல்லுவா. பலநாட்கள் அவரது கதையை கேட்டபடியே நான் நித்திரையாகிவிடுவேன். ஆச்சியிடம் இருந்துதான் எனக்கும் இந்த கதை சொல்லும் (எழுதும்) திறன் கொஞ்சமாவது வந்ததோ என்று பலதடவை நினைத்திருக்கிறன்.

எனக்கு ஆச்சியை முதன்முதல் நினைவிருக்கும் காலத்திலேயே ஆச்சிக்கு எழுபது வயதாவது இருக்கும், ஆனாலும் ஒரு நாளாவது நோய் நொடியென்று ஆச்சி படுத்திருந்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆச்சி இறந்து போனதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை.

எனக்கு கிடைத்த இந்த கதை கேட்கும் இனிய அனுபவம், இன்றைய அவசர உலகில் எங்கள் அடுத்த சந்ததிகளுக்கு கிடைக்காமல் போவது வேதனையாக இருக்கிறது. இதுபோல இருப்பவை பலதை தொலைத்துக்கொண்டு இல்லாததை தேடிக்கொண்டு இருக்கிறோமா விடை தெரியவில்லை.

 

 

 

சொல் விளக்கம்:

சீமைக்காரன் – ஆங்கிலேயன்

கோச்சி – புகையிரதம்

ஆமிக்காரன் – இராணுவத்தினர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *